மோசடி செய்த தொழில் அதிபரை சித்தராமையா பாதுகாக்க முயற்சி

மோசடி செய்த தொழில்அதிபரை சித்தராமையா பாதுகாக்க முயற்சி புகைப்பட ஆதாரத்துடன் பா.ஜனதா பரபரப்பு குற்றச்சாட்டு.
மோசடி செய்த தொழில் அதிபரை சித்தராமையா பாதுகாக்க முயற்சி
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. இதில், பா.ஜனதாவினர் காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் கட்சியினர் பா.ஜனதா மீதும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பா.ஜனதா முதல்-மந்திரி சித்தராமையா மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, பெங்களூருவில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

மலேசியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கியூ-1 குழும நிறுவனத்தின் தலைவர் விஜய் ஈஸ்வரன். இலங்கை தமிழரான இவர் மீது இந்தியாவில் சட்டவிரோத பணபரிமாற்றம், பண மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளது. தலைமறைவான இவரை சென்னை, மும்பை, டெல்லி போலீசார் தேடி வருகிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டு இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதுதொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சித்தராமையா கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் வைத்து தொழில் அதிபர் விஜய் ஈஸ்வரனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, கர்நாடக அரசு சார்பில் அவரை பாதுகாக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக சித்தராமையா கூறியுள்ளார். இதுதொடர்பாக இந்திய பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை சார்பில் கர்நாடக அரசுக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. ஆனால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சித்தராமையா, தனது முதல்-மந்திரி பதவியை துஷ்பிரயோகம் செய்து மோசடி செய்த தொழில் அதிபர் விஜய் ஈஸ்வரன் மற்றும் அவருடைய நிறுவனத்தை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் சித்தராமையா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குருபீரித் சிங் என்பவர் கவர்னரிடம் புகார் கொடுத்தார். இருப்பினும் சித்தராமையா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய சித்தராமையா மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது, மோசடி செய்த தொழில் அதிபர் விஜய் ஈஸ்வரனும், சித்தராமையாவும் சந்தித்து பேசுவது போன்ற புகைப்பட ஆதாராத்தை சம்பித் பத்ரா வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com