அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு - முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறும் வகையில் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று நாராயணசாமி அறிவித்துள்ளார்.
அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு - முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அமைச்சரவை ஒப்புதலுடன் தாக்கல் செய்யப்பட்ட போது தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை மாற்றி, புதுவையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் (சுமார் 3 லட்சம் குடும்ப உணவு பங்கீட்டு அட்டையில் உள்ள அனைத்து நபர்களுக்கும்) மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஒட்டுமொத்த முழு சுகாதார பாதுகாப்பு காப்பீடு திட்டம் ஒன்றை அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு புதுவை அரசின் சுகாதாரத்துறை, நிதித்துறை மற்றும் சட்டத்துறை ஒப்புதல் அளித்துள்ளன. மத்திய அரசின் தேசிய சுகாதார நிறுவனமும், புதுச்சேரி அரசின் இந்த திட்டத்தில் பிரதமர் ஜன் ஆரோக்கிய திட்டத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அமைச்சரவை, சட்டமன்றம் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மத்திய அரசின் தேசிய சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அனைத்தும் ஒப்புக்கொண்ட இந்த திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான அரசு ஆணை வழங்கிட ஏதுவாக கவர்னரிடம் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி புதுவையில் உள்ள சுமார் 3 லட்சம் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களில், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 60 சதவீத காப்பீட்டு தொகையினை மத்திய அரசின் தேசிய சுகாதார நிறுவனமும், மீதி 40 சதவீத காப்பீட்டு தொகையினை புதுவை அரசும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்கும், மீதமுள்ள 1 லட்சம் குடும்பங்களுக்கும் நமது அரசு 100 சதவீதம் காப்பீடு தொகையை வழங்கும் வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் அரசாணை வெளியிடப்படும். ஏழை, எளிய மக்களின் நலன் கருதி கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறேன். புதுச்சேரியில் குடும்ப உணவுப்பங்கீட்டு அட்டை வைத்துள்ள அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்கு வேண்டுமானாலும் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களும் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் புதுவை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தினை பொங்கல் திருநாளில் புதுச்சேரி மக்களுக்கான பொங்கல் பரிசாக அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com