புதுவை தட்டாஞ்சாவடியில் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இலவச அரிசி; விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

தட்டாஞ்சாவடியில் மழை வெள்ளத்தில் இலவச அரிசி அடித்து செல்லப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அரிசி மூட்டைகள் மழையில் நனைந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
அரிசி மூட்டைகள் மழையில் நனைந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

அரிசி வினியோகம்

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அரிசி, கொண்டைக்கடலை ஆகியவற்றை வழங்கி வருகிறது.

புதுவை மாநிலத்தில் தற்போது ரேஷன்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் அரிசி மற்றும் கொண்டைக்கடலை குடிமை பொருள் வழங்கல் துறையின் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு ஆசிரியர்கள் மூலம் வினியோகிக்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பு

கடந்த 4-ந் தேதி முதல் புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர். எனவே பயனாளிகளுக்கு ஏற்கனவே வினியோகம் செய்தது போக மீதம் இருந்த அரிசி, கொண்டைக்கடலை மூட்டைகள் மீண்டும் குடிமை பொருள் வழங்கல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குடிமைபொருள் வழங்கல் துறை ஊழியர்கள் அவற்றை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மாநில கூட்டுறவு நுகர்வோர் இணைய குடோனில் இருப்பு வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சில அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்தன. அந்த மூட்டைகளை உலர்த்துவதற்காக குடோனுக்கு வெளியே அடுக்கி வைத்ததாக தெரிகிறது.

மூட்டைகள் சேதம்

அதில் சில அரிசி மூட்டைகளை எலிகள் கிழித்து சேதப் படுத்தியுள்ளது. எனவே அந்த மூட்டைகளில் இருந்த அரிசிகள் வெளியே கொட்டி கிடந்தன. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் அந்த அரிசி மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அருகில் உள்ள கால்வாயில் சுமார் கி.மீ. தூரத்திற்கு பரவி கிடந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இவற்றை மாடுகள், பறவைகள் தின்றன.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் குடோனுக்கு வெளியில் இருந்த அரிசியை மற்ற சாக்குகளில் மாற்றி வாணரப்பேட்டையில் உள்ள இந்திய உணவுக்கழக குடோனுக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் ஆலோசனை

இந்த விவகாரம் தொடர்பாக புதுவை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் நேற்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சேதம் அடைந்த அரிசி மூட்டைகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com