

கூடலூர்
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து 120 ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கும் விழா கூடலூர் சாஸ்தாபுரி அரங்கில் நடைபெற்றது.
கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன இயக்குனர் சிவஞானம் தலைமை தாங்கி 120 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, தற்போது வழங்கப்பட்ட தையல் எந்திரங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு முதல்படியாக இருக்கும் என நம்புகிறோம். தமிழக அரசு மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் கடன் உதவிகள், பயிற்சிகள் வழங்கி வருகிறது.
பொதுமக்கள் தங்களின் தேவைகளை அறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை நாடி அரசின் திட்டங்களை பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இதன் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்றார்.
விழாவில் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், தாசில்தார் சித்தராஜ், நகராட்சித் தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.