

திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி தாடிக்காரன் முக்கு அலுவலகத்தில் நேற்று நடந்தது.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். பெண் தொழிலாளர்களுக்கு சேலையும், ஆண் தொழிலாளர்களுக்கு பேண்ட், சட்டையும், துண்டும் வழங்கப்பட்டன. இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாநகர் நல அதிகாரி பூபதி மற்றும் உதவி ஆணையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக துப்புரவு தொழிலாளர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கீழ்த்தளத்தில் துப்புரவு பணி நாங்கள் மேற்கொள்ளும்போது மாடியில் இருந்து குப்பையை தங்கள் மீது கொட்டுவதாகவும், மாநகராட்சியில் உள்ள சில அதிகாரிகள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதாகவும் புகார் தெரிவித்தார்கள். இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி எம்.எல்.ஏ. சமாதானம் செய்தார்.