வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை: வேளச்சேரியில் ரூ.1 கோடி போதை பொருள் பறிமுதல் 4 பேர் கைது

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து வேளச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை: வேளச்சேரியில் ரூ.1 கோடி போதை பொருள் பறிமுதல் 4 பேர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விலை உயர்ந்த போதை பொருள் விற்கப்படுவதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் தலைமையில் கிண்டி உதவி கமிஷனர் புகழ்வேந்தன், வேளச்சேரி இன்ஸ்பெக்டர் ஜெரி, சப்-இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் வேளச்சேரி பேபி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர்.

காரை ஓட்டி வந்த திருவல்லிகேணியை சேர்ந்த அஜ்மல் கான் (வயது 22) என்பவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை போலீசார் சோதனையிட்டனர்.

அதில் அவரிடம் 1 கிராம் மெத்தபெட்டமைன் என்ற விலை உயர்ந்த போதைப்பொருள் வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அஜ்மல்கானை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அதில் போதைப்பொருள் கடத்தி விற்கும் கும்பலை சேர்ந்த ராயபுரத்தைச் சேர்ந்த பஷீர் அகமது (47) என்பவர் வெளிநாடுகளில் இருந்து போதை பொருளை கடத்தி வந்து இடைத்தரகர்களான பெரம்பூரைச் சேர்ந்த அப்துல் கலிக் (48), சேப்பாக்கத்தை சேர்ந்த சேட்டு முகமது (47) ஆகியோர் மூலம் வேளச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்றது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான அஜ்மல் கான் உள்பட 4 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடி மதிப்பிலான 1 கிலோ 360 கிராம் மெத்தபெட்டமைன் போதை பவுடர், ரூ.1 லட்சத்து 22 ஆயிரம், 2 கார்கள், 1 மோட்டார் சைக்கிள் மற்றும் 7 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரை கிராம் மெத்தபெட்டமைன் போதை பவுடரை தண்ணீரில் கலந்தால் 10 முறை பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தினால் 6 மணி நேரம் வரை போதையில் மிதக்க செய்யும். 1 கிராம் எடையுள்ள பவுடரை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்வது தெரிந்தது. கைதான 4 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போதை பொருள் ஆசாமிகளை பிடித்த தனிப்படைபோலீசாரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் ஆகியோர் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com