சென்னையில் இருந்து மைசூருவுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நவீன பெட்டியுடன் இயங்கியது

சென்னையில் இருந்து நேற்று மைசூருவுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நவீன பெட்டியுடன் இயங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் இருந்து மைசூருவுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நவீன பெட்டியுடன் இயங்கியது
Published on

பெங்களூரு,

இந்திய ரெயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகளை கவரும் வகையில் ரெயில் பெட்டிகள் அதிநவீன முறையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரலில் இருந்து கோவை மற்றும் மைசூருவுக்கு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பெட்டிகளும் மேம்படுத்தப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஒரு பெட்டி நேற்று சென்னை-மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்பட்டது. நவீன வசதிகளுடனான பெட்டியுடன் நேற்று காலை 6 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 10.50 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தது. அங்கிருந்து காலை 11 மணிக்கு புறப்பட்ட ரெயில் மதியம் 1 மணிக்கு மைசூருவை சென்றடைந்தது.

புதிதாக இணைக்கப்பட்ட ரெயில் பெட்டியில் ஏ.சி. வசதியுடன் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், வை-பை, தானியங்கி கதவுகள், எல்.இ.டி. விளக்குகள், உள்புற அலங்காரம், பயணிகள் உடைமைகளை வைப்பதற்கு இடவசதி, மடிக்கணினி பயன்படுத்துவதற்கு இருக்கைகளின் பின்னால் தனிவசதி, தமிழ்நாடு சுற்றுலா இடங்களின் படங்கள், தீத்தடுப்பு உபகரணங்கள் ஆகிய வசதிகளும் ரெயில் பெட்டியில் உள்ளன. அத்துடன், பார்வையற்றவர்கள் இருக்கைகளை கண்டுபிடிக்க பெட்டியின் உள்ளே நுழையும் தானியங்கி கதவிலும் பிரெய்லி குறியீடுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், நவீன வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ரெயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்கும். பிரெய்லி குறியீடு முறைகள் பார்வையற்றவர்களுக்கு நன்மையை பயக்கும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com