கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் - அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் - அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
Published on

தூத்துக்குடி,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று மதியம் மதுரையில் இருந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு இருந்தவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி மற்றும் டாக்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மையங்களையும் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 1,405 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த மாவட்டத்தில் 52 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பிறந்த குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்பதை அறிய சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உலக அளவிலான பிரச்சினையாக உள்ளது. இந்த நேரத்தில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்காக 100, 200 என படிப்படியாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, தற்போது 600 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் இதனை அதிகப்படுத்த கூறியுள்ளோம். இதில் 240 படுக்கைகளுக்கு குழாய்கள் மூலம் ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆஸ்பத்திரியில் உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் உள்ளன. அதேபோல் மாவட்டத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பிளாஸ்மா தானம் மூலம் 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 24 பேர் பூரணமாக குணம் அடைந்து உள்ளனர். சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைக்காக சிறப்பு மையம் 2 நாட்களில் தொடங்கப்படும். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவரும் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், பிளாஸ்மா தானம் செய்வோம், உயிர் காப்போம் என்று பதிவு செய்து உள்ளார்.

இந்தியாவில் பி.சி.ஆர். டெஸ்ட் தமிழகத்தில் தான் அதிகமாக செய்யப்படுகிறது. கொரோனா தொற்றை பொறுத்தவரை எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில் தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், சின்னப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், அறங்காவலர் குழு தலைவர் மோகன் உள்பட பலர் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com