எகிப்து, நைஜீரியாவில் இருந்து, திண்டுக்கல்லுக்கு வந்த 200 டன் வெங்காயம் - கிலோ ரூ.110-க்கு விற்பனை

எகிப்து, நைஜீரியாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 200 டன் பெரிய வெங்காயம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, திண்டுக்கல் வெங்காய தரகுமண்டியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
எகிப்து, நைஜீரியாவில் இருந்து, திண்டுக்கல்லுக்கு வந்த 200 டன் வெங்காயம் - கிலோ ரூ.110-க்கு விற்பனை
Published on

திண்டுக்கல்,

பருவம் தவறி பெய்த மழை காரணமாக தமிழகத்தில் பெரிய வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.200 வரை விற்பனை ஆனது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் பரிய வெங்காயத்தின் விலை உயர்ந்தது. திண்டுக்கல் வெங்காய தரகுமண்டியில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.130 முதல் ரூ.160 வரை விற்பனை ஆனது.

இந்த நிலையில் எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் திண்டுக்கல் வெங்காய தரகுமண்டிக்கு பெரிய வெங்காயம் மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110-க்கு விற்கப்பட்டது. இதன் காரணமாக திண்டுக்கல்லில் ஓட்டல் நடத்துபவர்கள், காய்கறி வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தை வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த வெங்காய தரகுமண்டி முகவர் லட்சுமணன் கூறுகையில், மராட்டிய மாநிலத்தில் இருந்து தான் திண்டுக்கல்லுக்கு பெரிய வெங்காயம் வழக்கமாக கொண்டுவரப்படும். தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்தது. இதன் காரணமாகவே அதன் விலை உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து 200 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பெரிய வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி இதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

அப்போது பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கட்டுப்படியான விலையில் பெரிய வெங்காயம் விற்பனை ஆக வாய்ப்புள்ளது. சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை அதன் வரத்து பாதிக்கப்படவில்லை. எனவே கட்டுப்படியான விலை கிடைக்கிறது.

தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.130 வரை விற்பனை ஆகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com