கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் மோதி ‘ரவுடி ரங்கா’ யானை செத்தது

கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் மோதி ‘ரவுடி ரங்கா’ யானை செத்தது.
கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் மோதி ‘ரவுடி ரங்கா’ யானை செத்தது
Published on

குடகு,

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா நாகரஒலே வனப்பகுதியில் மத்திகோடு யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இந்த பயிற்சி முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள், இரவு நேரத்தில் வனப்பகுதியில் உலவ விடப்படுவது வழக்கம். அதேபோல, நேற்று முன்தினம் இரவும் மத்திகோடு யானைகள் பயிற்சி முகாமில் உள்ள யானைகள் வெளியே விடப்பட்டன.

அவற்றில் ஒரு யானை, கோணிகொப்பா-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கு தனியார் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பஸ், கோணிகொப்பா-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மத்திகோடு பகுதியில் வந்தபோது, சாலையின் குறுக்கே நின்ற அந்த யானையின் மீது கண்இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அந்த யானை, சாலையோரம் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மேலும் பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படாமல் உயிர்தப்பினர்.

இதுபற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவர் முஜீப் தலைமையிலான மருத்துவ குழுவினர் வந்தனர். அவர்கள், அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யானையை எழுந்து நிற்க வைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இறுதியாக, சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த யானை பரிதாபமாக செத்தது. இதையடுத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதேப்பகுதியில் குழிதாண்டி புதைக்கப்பட்டது.

தனியார் பஸ் மோதி செத்தது, மத்திகோடு யானைகளின் பயிற்சி முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ரங்கா என்ற 45 வயது நிரம்பிய ஆண் யானை ஆகும். இந்த யானை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பன்னரகட்டா பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும் அந்த யானை சிலரை கொன்றும் உள்ளது. இதனால் அந்த யானைக்கு, வனத்துறையினர், ரவுடி ரங்கா என்று பெயரிட்டனர்.

இதையடுத்து அந்த யானை பிடிக்கப்பட்டு, மத்திகோடு யானைகள் பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இந்த யானைக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கும்கியாக உள்ள இந்த ரங்கா யானை, கடந்த ஆண்டு நடந்த மைசூரு தசரா விழாவில் கலந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு தசரா விழாவில் கலந்துகொள்ளவில்லை.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொன்னம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான தனியார் சொகுசு பஸ்சை பறிமுதல் செய்துகொண்டனர். இதுகுறித்து பொன்னம்பேட்டை போலீசார் தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, தனியார் பஸ் மோதி ரங்கா யானை செத்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் வேக தடைகள் அமைக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com