

தஞ்சாவூர்,
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் நிபா வைரஸ்காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதையொட்டி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதற்காக தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 26 படுக்கைகளும் போடப் பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களில் இருந்து கேரளத்துக்கு கூலி வேலைக்காக ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் கூலி வேலை செய்து வந்த அரியலூரை சேர்ந்த 35 வயது வாலிபர் காய்ச்சலுடன் 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நிபா வைரஸ் குறித்த தகவல்கள் வருவதால் அவர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு வந்தார். இதையடுத்து அவர் தனி வார்டில் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவருக்கு நிபா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை என்றும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுடன் யாரும் வரவில்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.