மதுரையில் இருந்து விமானத்தில் பறந்து வந்த இதயம் சென்னை பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தம் ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

மதுரையில் இருந்து 45 நிமிடத்தில் விமானத்தில் கொண்டுவரப்பட்ட இதயத்தை சென்னை பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தி ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரையில் இருந்து விமானத்தில் பறந்து வந்த இதயம் சென்னை பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தம் ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
Published on

சென்னை,

சென்னையை சேர்ந்தவர் சுஜாதா (வயது 36). இவர் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சுஜாதாவுக்கு இதயத்தில் மிகப்பெரிய பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இந்த பிரச்சினைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என அவருடைய குடும்பத்தினர் கருதினர். இதற்காக இதயம் தானம் பெற பதிவு செய்யப்பட்டது.

ரேலா ஆஸ்பத்திரிக்கு, தமிழ்நாடு மாற்று அறுவை சிசிச்சை ஆணையம் அமைப்பில் இருந்து சுஜாதாவுக்கு தேவையான இதயம் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயத்தை கொடுக்க, அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர்.

இந்தநிலையில், மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் 500 கி.மீ. தூரத்தில் உள்ள மதுரையில் இருந்து 45 நிமிடத்தில் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் ரேலா ஆஸ்பத்திரி மற்றும் கிம்ஸ் ஆஸ்பத்திரியின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் மாற்று இதயத்தை சுஜாதாவுக்கு வெற்றிக்கரமாக பொருத்தி சாதனை படைத்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சுஜாதா நலமுடன் உள்ளார்.

சுஜாதாவால் தனது அன்றாட பணிகளை தற்போது மேற்கொள்ள முடிகிறது. தானே உடைகளை அணிதல், யாருடைய உதவியும் இல்லாமல் தானே நடந்து செல்லுதல், உணவு உட்கொள்ளுதல் முதலான அனைத்து வேலைகளையும் யாரையும் நம்பி இருக்காமல் தானே செய்து வருகிறார். மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டுவர உதவிய அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், மதுரை மற்றும் சென்னையில் உள்ள அவர்களுடைய குழுவில் உள்ள அனைவருக்கும் ரேலா ஆஸ்பத்திரி நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுஜாதா கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு முன் நீண்ட தூரம் நடந்தாலோ, மாடி படிகளில் ஏறினாலோ எனக்கு மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும். எனக்கு இதயத்தை தானம் கொடுத்து மறுவாழ்வு அளித்த இளைஞரின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

ரேலா ஆஸ்பத்திரி மற்றும் கிம்ஸ் ஆஸ்பத்திரியின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்ட இயக்குனர் டாக்டர் சந்தீப் அட்டாவர் கூறுகையில், நோயாளி மிகவும் மோசமான சூழலில் இருந்தார். அவருடைய இதயத்தின் செயல்பாடு இறுதி நிலையை எட்டியிருந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிக்கரமாக செய்து முடித்த பின் படிப்படியாக குணமடைய தொடங்கினார். 4-வது நாளில் யாருடைய உதவியும் இல்லாமல் தானே தனது வேலைகளை செய்வதோடு, இயல்பான உணவு பழக்கவழக்கத்தக்கும் மாறினார் என்றார்.

ரேலா ஆஸ்பத்திரியின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் முகமது ரேலா கூறுகையில், இது எங்களின் மிகப்பெரிய சாதனை ஆகும். பொருத்தமான உடல் உறுப்புக்காக காத்திருக்கும் சூழலில் நோயாளிகள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாக வேண்டிய சூழல் இருக்கும். சவாலான இந்த காலக்கட்டத்தில் சரியான நேரத்தில் சரியான நபரிடம் இருந்து பொருத்தமான இதயம் கிடைத்ததால் இது சாத்தியமாகி உள்ளது என்றார்.

இந்த தகவலை ரேலா ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com