இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்திய - 30 பேர் கைது

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்திய 30 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்திய - 30 பேர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுடன் இணைந்து விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானம் நின்றிருந்த நடைமேடைக்கே சென்று அதில் வந்த பயணிகளிடம் சோதனை செய்தனர். அதில் சென்னை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 30 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 30 பேரிடம் இருந்தும் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 400 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 4 பேரை சோதனை செய்த அதிகாரிகள், அவர்களின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 450 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த 34 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 66 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ 850 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த முகமது நியாஸ்(வயது 30) உள்பட 30 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த உசேன்(32) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவரிடம் இருந்த 2 கைக்கடிகாரத்தில் தங்கம் மற்றும் மோதிரம் ஆகியவற்றை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள், உசேனிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com