

ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது மைதீன்(வயது 28) என்பவர் விமான நிலையத்தில் சந்தேகப்படும்படியாக அங்கும் இங்குமாக சுற்றி கொண்டு இருந்தார்.
இதனால் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் சிறிய அளவிலான 8 பிளாஸ்டிக் கூடைகள் இருந்தன. அவற்றின் மீது ஓட்டிஇருந்த பிளாஸ்திரியை பிரித்து கூடையை திறந்து பார்த்தனர். அதில் வன உயிரினங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரிடம் இருந்த 8 கூடைகளிலும் வடஅமெரிக்காவில் வாழும் 12 கங்காரு எலிகள், 3 புல்வெளி நாய்கள், இங்கிலாந்து, ரஷியா, இத்தாலி போன்ற நாடுகளில் வாழும் சிவப்பு அணில், கைமென் நாட்டில் காடு மற்றும் கடலோர பகுதியில் வாழும் 5 நீல பல்லிகள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவற்றை யாருக்காக தாய்லாந்தில் இருந்த கடத்தி வந்தீர்கள்? என முகமது மைதீனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர், இவை எனக்கு சொந்தமானது இல்லை. தாய்லாந்து நாட்டு விமான நிலையத்தில் இந்த கூடைகளை என்னிடம் கொடுத்த ஒருவர், சென்னை விமான நிலையத்தில் இதை வேறு ஒருவர் வந்து பெற்றுக்கொள்வார் என்று கூறியதாக தெரிவித்தார்.
இதையடுத்து முகமது மைதீனை விமான நிலையத்தின் வெளியே அழைத்து வந்து, அவரிடம் இருந்த வன உயிரினங்களை வாங்க யாராவது வருகிறார்களா? என அதிகாரிகள் கண்காணித்தனர். ஆனால் அப்படி யாரும் வரவில்லை.