காங்கிரஸ் கட்சியிலிருந்து தனவேலு எம்.எல்.ஏ. இடைநீக்கம் - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுவை காங்கிரஸ் கட்சியிலிருந்து தனவேலு எம்.எல்.ஏ. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து தனவேலு எம்.எல்.ஏ. இடைநீக்கம் - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடந்துவரும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தனவேலு ஊழல் புகாரினை தெரிவித்து வருகிறார். குறிப்பாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ் சாட்டினார்.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடியை சந்தித்தும் புகார் தெரிவித்துள்ளார். தனவேலு எம்.எல்.ஏ.வின் நடவடிக்கை அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தனவேலு எம்.எல்.ஏ. மீது முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்று கட்சி மேலிடத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில தினங்களாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதுமட்டுமின்றி கவர்னரை சந்தித்தும் புகார் கடிதம் கொடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக கட்சியின் எந்த நிகழ்விலும் பங்கெடுக்காமல் இருந்து வருகிறார்.

அவரிடம் தொலைபேசியில் பேசியும், கடிதங்கள் அனுப்பியும் கட்சி அலுவலக நிகழ்விலும், காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டங்களி லும் கலந்துகொள்ளவில்லை. இருந்தபோதிலும் அவர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. என்பதால் காங்கிரஸ் பேரியக்கம் அவரது நடவடிக்கையை பொறுத்துக்கொண்டது.

அவர் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு மாகி சுயேட்சை எம்.எல்.ஏ. ராமச்சந்திரனை சந்தித்து வேறொரு ஆட்சிக்கு ஆதரவுதர கேட்டுள்ளார். அதற்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்துவிட்டார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட அவரை முதல்-அமைச்சர் நேரடியாக அழைத்து பேசி உள்ளார்.

அப்படியிருந்தும் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் தனவேலு எம்.எல்.ஏ. ஈடுபட்டார். கட்சியில் உள்ள பிரச்சினைகளை கட்சிக்குள்ளேயே பேசித்தீர்க்கவேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவரது நடவடிக்கைகள் தொடர்பாக நானும், முதல்-அமைச்சரும் அகில இந்திய தலைமைக்கு தெரிவித்தோம். அந்த அடிப்படையில் அவர்கள் சில கட்டளைகளை எங்களுக்கு இட்டுள்ளனர்.

கட்சி விரோத நடவடிக்கையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அடிமட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என யார் ஈடுபட்டாலும் அதை கட்சி வேடிக்கை பார்க்காது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தனவேலு எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். அவரது நடவடிக்கை குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க கடிதம் அனுப்பப்படுகிறது. அவரது பதில் கட்சி மேலிடத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அதை ஒழுங்கு நடவடிக்கைக்குழு பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com