தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அத்துமீறி வெளியே நடமாடிய 5 பேர் மீது வழக்கு

ஊட்டி அருகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அத்துமீறி வெளியே நடமாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அத்துமீறி வெளியே நடமாடிய 5 பேர் மீது வழக்கு
Published on

ஊட்டி,

ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் ஊசி தொழிற்சாலைக்கு கொரோனா வைரஸ் பாதித்த மக்கள் தொடர்பு அலுவலர் வந்து சென்றார். இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலை மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் 755 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. 755 பேரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதித்ததில் படிப்படியாக இதுவரை 110 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட உல்லாடா, எல்லநள்ளி, மந்தாடா புது லைன் உள்பட 6 கிராமங்கள் மூடப்பட்டு உள்ளன.

சுகாதாரத்துறையினர் ஆய்வு

கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்திறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதை மீறி வெளியே நடமாடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று வழங்கப்படுகிறது. உல்லாடா கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு குடியிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என்று சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

5 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் அந்த கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருக்காமல் 5 பேர் அத்துமீறி வெளியே நடமாடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நோயை பரப்பும் வகையில் உத்தரவை மீறி வெளியே நடமாடியதாகவும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி மாவட்டத்துக்குள் வாகனங்களில் வருபவர்கள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்று சரிபார்த்த பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் இல்லாமல் வந்தால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இ-பாஸ் இல்லாமல் நீலகிரிக்குள் நுழைபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com