மைசூரு அரண்மனையில் இருந்து லாரிகள் மூலம் 9 தசரா யானைகள் முகாம்களுக்கு திரும்பின

மைசூரு அரண்மனையில் இருந்து லாரிகள் மூலம் 9 தசரா யானைகள் முகாம் களுக்கு திரும்பின.
மைசூரு அரண்மனையில் இருந்து லாரிகள் மூலம் 9 தசரா யானைகள் முகாம்களுக்கு திரும்பின
Published on

மைசூரு தசரா விழா கடந்த 19-ந் தேதி ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. தசரா விழாவில் பங்கேற்பதற்காக துபாரே மற்றும் நாகரஒலே வனப்பகுதிகளில் உள்ள யானைகள் முகாம்களில் இருந்து அர்ஜூனா யானை உள்பட 12 யானைகள் 2 கட்டங்களாக கடந்த 1 மாதங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டன. இதில் அர்ஜூனா யானைதான் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தசரா விழா முடிந்ததையடுத்து யானைகள் அனைத்தும் மைசூரு அரண்மனை வளாகத்தில் ஓய்வெடுத்தன. நேற்று அதில் கோபி, விக்ரமா, விஜயா ஆகிய 3 யானைகளைத் தவிர அர்ஜூனா உள்பட மற்ற 9 யானைகளும் முகாம்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சி மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று காலை 9 மணியளவில் நடந்தது. நிகழ்ச்சியில் மந்திரி சா.ரா.மகேஷ், கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், அரண்மனை மண்டல இயக்குனர் சுப்பிரமணியா, கால்நடை டாக்டர் நாகராஜ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் யானைகளுக்கு அரண்மனை அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சத்துணவு வழங்கினர். மேலும் யானைப் பாகன்கள், வளர்ப்பார்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

பின்னர் அர்ஜூனா யானை உள்பட 9 யானைகளும் அரண்மனை வளாகத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டன. அவைகள் அங்கிருந்து நேராக நாகரஒலே மற்றும் துபாரே யானைகள் முகாம்களுக்கு சென்றன. முன்னதாக யானைகளின் எடையளவு ஆய்வு செய்யப்பட்டது. இதில் பிரசாந்தா யானையைத் தவிர மற்ற 11 யானைகளும் 300 முதல் 400 கிலோ வரை எடை அதிகரித்து இருந்தன. பிரசாந்தா யானைக்கு உடல்நிலை சரியில்லாததால் அது 340 கிலோ வரை எடை குறைந்திருந்தது. அந்த யானை தசரா விழாவிற்காக அழைத்து வரப்படும்போது 4,650 கிலோ எடை இருந்தது. தற்போது விழா முடிந்து திரும்பும்போது அது 4,310 கிலோவாக இருந்தது.

இதுபற்றி அரண்மனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த 19-ந் தேதி விஜயதசமி நாளன்று ராணி பிரமோதா தேவியின் தாய் புட்டசின்னமண்ணி உடல்நலக்குறைவால் இறந்தார். அதற்கு அடுத்த மறுநாள், அதாவது 20-ந் தேதி(நேற்று முன்தினம்) மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் சகோதரி விசாலாட்சி தேவி இறந்தார். இதனால் அரண்மனையில் தீட்டு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அரண்மனையில் நடக்க வேண்டிய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

இன்று(அதாவது நேற்று) தீட்டு கழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாளை(அதாவது இன்று) காலை 8 மணிக்கு மீண்டும் அரண்மனையில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். அதாவது விஜயதசமி நாளன்று நடக்க இருந்த ரத்தம் சிந்தும் சண்டை போட்டி, பன்னிமரத்திற்கு பூஜை செலுத்துதல், தங்க சிம்மாசனம் மற்றும் அம்பாரிக்கு பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடக்கும். அதற்காக கோபி, விக்ரமா, விஜயா ஆகிய 3 யானைகளும் அரண்மனை வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளன. அர்ஜூனா யானை உள்பட மற்ற 9 யானைகளும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com