நாகப்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ்சில், மது போதையில் கண்டக்டர் செய்த ரகளையால் பரபரப்பு

நாகப்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ்சில் மதுபோதையில் பணியில் இருந்த கண்டக்டரின் ரகளையால் அந்த பஸ்சை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு பயணிகள் கொண்டு செல்ல வைத்தனர். இதனால் நள்ளிரவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ்சில், மது போதையில் கண்டக்டர் செய்த ரகளையால் பரபரப்பு
Published on

ராமநாதபுரம்,

நாகப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அரசு விரைவு பஸ் ஒன்று ராமநாதபுரம் வழியாக திருவனந்தபுரம் செல்ல தயாரானது. அந்த பஸ்சில் பயணிகள் ஏறி காத்திருந்த நிலையில் கண்டக்டர் வருகைக்காக பஸ் புறப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் பஸ் கண்டக்டர், தான் புறப்பட தாமதமாகி விட்டதால் பஸ்சை எடுத்துக்கொண்டு வரும்படியும், வழியில் ஏறிக்கொள்வதாகவும் கூறினாராம்.

இதன்படி பஸ்சை டிரைவர் எடுத்துக்கொண்டு சென்றபோது சற்று தூரத்தில் கண்டக்டர் பஸ்சில் ஏறிக்கொண்டதாக கூறப்படுகிறது. வாயில் துணியை கட்டிக்கொண்டு பஸ்சில் ஏறிய கண்டக்டர், யாரிடமும் பேசாமல் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட்டை முறையாக கொடுக்காமல் இருந்தாராம். பயணிகள் டிக்கெட் மற்றும் மீதி சில்லரை கேட்டபோது தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

அப்போதுதான் கண்டக்டர் மதுபோதையில் இருந்ததை பயணிகள் கவனித்துள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மீமிசல் பகுதியில் பஸ்சில் ஏறிய பயணிகளுக்கும் டிக்கெட் கொடுக்காமல், பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு கண்டக்டர் ரகளையில் ஈடுபட்டாராம். இந்த தகராறு நீண்டுகொண்டு வந்த நிலையில் அந்த பஸ் ராமநாதபுரத்திற்கு நள்ளிரவில் வந்தது.

அப்போது பஸ்சில் இருந்த சில பயணிகள் இறங்கிகொண்ட நிலையில் மீதம் உள்ள பயணிகள் அந்த பஸ்சில் தொடர்ந்து செல்ல முடியாது என்று கூறி பஸ்சை கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல வைத்தனர். போலீஸ் நிலையத்தில் போலீசார் இருதரப்பினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பயணிகள் பஸ் கண்டக்டர் மதுபோதையில் இருப்பதாக புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில், கண்டக்டர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் அறிந்து விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அந்த பஸ்சில் செல்ல முடியாது என்று தெரிவித்ததால் அதற்கு சற்று முன்னர் கிளம்பி திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ்சை போக்குவரத்து துறை அதிகாரிகள் கீழக்கரையில் நிறுத்தி வைத்து, இங்கிருந்த பயணிகளை அழைத்து சென்று அந்த பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

பணியின் போது போதையில் இருந்த கண்டக்டரை போலீசார் எச்சரித்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த கண்டக்டரை போக்குவரத்து அதிகாரிகள் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com