100 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி கொள்ளை, அடகுக்கடையில் இருந்து இரும்பு பெட்டகத்தை தூக்கிச்சென்ற 6 பேர் யார்?

அடகுக்கடை பூட்டை உடைத்து 100 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்த இரும்பு பெட்டகத்தை 6 பேர் தூக்கிச்சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
100 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி கொள்ளை, அடகுக்கடையில் இருந்து இரும்பு பெட்டகத்தை தூக்கிச்சென்ற 6 பேர் யார்?
Published on

ராமநத்தம்,

திட்டக்குடி அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 44). இவர் குடும்பத்துடன் தொழுதூரில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். கீழ்கல்பூண்டி கிராமத்தில் சங்கர், நகை அடகுக்கடை வைத்துள்ளார். இவரிடம் பல வாடிக்கையாளர்கள் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை அடமானம் வைத்து, கடன் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி நள்ளிரவில் இவருடைய கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த இரும்பு பெட்டகத்தை தூக்கிக்கொண்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கு அந்த இரும்பு பெட்டகத்தை உடைத்து, அதில் இருந்த 100 பவுன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொள்ளை சம்பவம் குறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்டமாக கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த கடையை மோப்பமிட்டபடி, இரும்பு பெட்டகம் கிடந்த விவசாயி நிலம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் நேரில் வந்து மர்மநபர்களின் கைரேகைகளையும், அவர்கள் விட்டுச்சென்ற சில தடயங்களையும் சேகரித்தனர். இது தொடர்பாக அவர்களும் விசாரித்து வருகின்றனர்.

இவை ஒருபுறம் இருந்தாலும், ராமநத்தம் காவல்துறை சார்பில் ஏற்கனவே கீழ்கல்பூண்டி கிராமத்தில் 3 முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று ராமநத்தம் போலீசார் பார்த்த னர்.

இதில் பஸ் நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அன்று நள்ளிரவில் 6 பேர், இரும்பு பெட்டகத்தை தூக்கிச்சென்ற காட்சி அதில் பதிவாகி உள்ளது. இதையடுத்து அதில் பதிவாகி உள்ள 6 பேர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com