சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகரும் தூத்துக்குடி மாவட்டம் - நெல்லை, தென்காசியிலும் கொரோனா பரவும் வேகம் குறைகிறது

சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறது. நெல்லை, தென்காசியில் கொரோனா பரவும் வேகம் குறைகிறது.
சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகரும் தூத்துக்குடி மாவட்டம் - நெல்லை, தென்காசியிலும் கொரோனா பரவும் வேகம் குறைகிறது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 229 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இதில் மொத்தம் 27 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அவர்கள் தூத்துக்குடி மற்றும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 25 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கண்காணிப்பு

கடந்த 20-ந்தேதி பசுவந்தனையை சேர்ந்த ஒரு பெண் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகள் தொடர்ச்சியாக சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தன. இதில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

ஆரஞ்சு மண்டலம்

கடந்த 8 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. 14 நாட்கள் தொடர்ச்சியாக புதிய தொற்று ஏற்படவில்லை என்றால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக தூத்துக்குடி மாவட்டம் மாறும். அதன்படி ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம் நகர்ந்துகொண்டு இருக்கிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 12-ந்தேதிக்கு பிறகு கொரோனா தொற்று எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை

இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், டவுன், பாளையங்கோட்டை, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவியது. மாவட்டத்தில் மொத்தம் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். இதில் 53 பேர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 10 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் தினமும் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பார்த்தால் நெல்லை மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62-ல் இருந்து 63 ஆக உயர்ந்தது. அதன்பிறகு கடந்த 5 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

தென்காசி

தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 35 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 25-ந்தேதி புளியங்குடியில் 4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கடந்த 3 நாட்களாக அங்கு புதிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார், நகரசபை அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நோயின் தாக்கம் குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com