திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மலர் தூவி வரவேற்பு

திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மலர் தூவி வரவேற்றார்.
திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மலர் தூவி வரவேற்பு
Published on

தளி,

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. அது தவிர பெரியகுளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம் உள்ளிட்ட குளங்கள் மூலமாக 3 ஆயிரத்து 60 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அத்துடன் உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் குடிநீர் திட்டங்கள் மூலம் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகள் அதன் முழுகொள்ளளவை நெருங்கியது. ஆனால் திருமூர்த்தி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக கடந்த 5-ந்தேதி திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சூழலில் திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று காலை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து மதகுகள் வழியாக பி.ஏ.பி.கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதையடுத்து அணைப்பகுதிக்கு சென்ற அமைச்சர் உள்பட அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொறுத்து ஒரு சுற்றுக்கு 21 நாட்கள் வீதம் 4 சுற்றுகளாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. அதேபோன்று பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்களுக்கு நேற்று முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 31-ந்தேதி வரையிலும் தளி வாய்க்கால் மூலமாக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், எம்.எல்.ஏ.க்கள் தனியரசு (காங்கேயம்), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), கந்தசாமி (சூலூர்), ஆர்.டி.ஓ. இந்திரவள்ளி, தாசில்தார் தயானந்தன், செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் காஞ்சிதுரை, உதவி பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், தளி பேரூராட்சி எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞரணி செயலாளர் செந்தில்ராஜ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையில் 49.38 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மூலமாக 805 கன அடியும், பாலாற்றின் மூலமாக 4 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு பி.ஏ.பி.பிரதான கால்வாயில் 250 கன அடியும், தளி வாய்க்காலில் 10 கன அடியும், குடிநீருக்காக 25 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com