நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்: ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு தொடங்கியது

நாளை (திங்கட்கிழமை) முதல் ரெயில்கள் இயங்குவதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று முன்பதிவு தொடங்கியது.
நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்: ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு தொடங்கியது
Published on

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ரெயில் சேவையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. தமிழகத்தில் பயணிகளின் நலன்கருதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகமானதால் சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரெயில்களை நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஈரோடு ரெயில் நிலையம் மார்க்கமாக, கோவை -சென்னை சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் -சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை -சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை -சென்னை கோவை எக்ஸ்பிரஸ், கோவை -மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இயக்கபட உள்ளன.

இதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது. முதல் நாளில் முன் பதிவு மையத்துக்கு குறைவான ரெயில் பயணிகளே வந்து முன்பதிவு செய்துள்ளதாக முன்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் ரெயில் வருவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே பயணிகள் ரெயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்றும், கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. ரெயிலில் பயணம் செய்பவர்கள் முறையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com