திருச்சி சிறையில் இருந்து தப்பியோடிய நைஜீரிய கைதி ராஜஸ்தானில் பதுங்கல்

திருச்சி சிறையில் இருந்து தப்பியோடிய நைஜீரிய கைதி, ராஜஸ்தானில் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசாருக்கு மிரட்டல் விடுப்பதுபோல், துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
திருச்சி சிறையில் இருந்து தப்பியோடிய நைஜீரிய கைதி ராஜஸ்தானில் பதுங்கல்
Published on

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் உள்ள முகாம் சிறையில் இலங்கை, வங்காள தேசம், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நைஜீரியாவை சேர்ந்த ஸ்டீவன் பால் அபுச்சியும் ஒருவர். இவர், போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக் கப்பட்டிருந்தார். பின்னர், அவர் திருச்சி முகாம் சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை போல நைஜீரியாவை சேர்ந்த மேலும் 3 பேர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டி ருந்தனர். நைஜீரிய நாட்டு தூதகரத்தின் மூலம் முறை யான நடவடிக்கை எடுக்கப் பட்ட பின்னரே, அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப் படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சிறை முகாமில் இருந்த ஸ்டீவன் பால் அபுச்சி, சிறையின் சுற்றுச்சுவர் அருகே இருந்த 25 அடி உயர மரத்தில் ஏறி, சிறைக்கு வெளியே உள்ள மற்றொரு மரம் வழியாக இறங்கி தப்பினார். மறுநாள்(19-ந் தேதி) காலை கணக்கெடுப்பின்போதுதான் நைஜீரிய கைதி தப்பியது தெரியவந்தது.

இது குறித்து சிறை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நைஜீரிய கைதி ஸ்டீவன் பால் அபுச்சியை பிடிக்க தனிப்படை அமைத்தனர். தனிப்படையினர் ஏற்கனவே திருப்பூர், பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் கியூ பிராஞ்ச் போலீசார் அவரது நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தபடி உள்ளனர்.

இந்த நிலையில் அவர், ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, மும்பை சென்ற தனிப்படையினர் அங்கிருந்து ராஜஸ்தானுக்கு விரைந்துள்ளனர். நைஜீரிய கைதியிடம் பாஸ்போர்ட் எதுவும் இல்லை என்பதால், ஒவ்வொரு நகராக ரெயிலில் ஏறி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே சமீபத்தில் நைஜீரிய கைதி ஸ்டீவன் பால் அபுச்சி, அவரது பெயரிலான முகநூலில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படைத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அப்புகைப்படம் போலீசாரை மிரட்டுவதுபோல உள்ளது. அந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்த போலீசார், அனைத்து மாநில போலீஸ் தலைமையிடத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் நைஜீரிய கைதியின் முகநூல் பதிவுகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து கண்காணித்தும் வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com