திருச்சியில் இருந்து 136 பேருடன் துபாய் சென்றபோது சுற்றுச்சுவரை உடைத்து பறந்த விமானம் விபத்தில் இருந்து தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்

திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்டபோது விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு விமானம் பறந்து சென்றது. அதில் இருந்த 136 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருச்சியில் இருந்து 136 பேருடன் துபாய் சென்றபோது சுற்றுச்சுவரை உடைத்து பறந்த விமானம் விபத்தில் இருந்து தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
Published on

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சேவை தவிர துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து துபாய்க்கு தினமும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று தினமும் அதிகாலை 1.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு துபாய்க்கு செல்வது வழக்கம்.

துபாயில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு வந்த இந்த விமானம், வழக்கம் போல் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு மீண்டும் துபாய்க்கு புறப்பட தயாரானது. துபாய் செல்வதற்காக வந்திருந்த பயணிகள் 130 பேரும் அதில் ஏறி அமர்ந்தனர். அதில் விமானி (பைலட்) உள்பட 6 ஊழியர்களும் இருந்தனர். விமானி கணேஷ் பாபு விமானத்தை ஓடுபாதையில் செலுத்தினார்.

ஓடுபாதையின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி நோக்கி ஊர்ந்து வந்த விமானம் தரையில் இருந்து எழும்பி பேரிரைச்சலுடன் மேலே பறக்க முயன்றது. அப்போது விமானத்தின் பின்பக்க சக்கரங்கள் ஓடுபாதையின் கடைசி பகுதியில் இருந்த ஐ.எல்.எஸ். எனப்படும் ஆண்டெனா கருவிகள் மீது மோதி, அதன் அருகில் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச்சுவரின் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு பறந்தது.

விமானத்தின் சக்கரங்கள் இடித்ததால் சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த சுற்றுச்சுவரின் மேல் பகுதியில் 2 இடங்களில் தலா 5 அடி அகலத்திற்கு சுவர் இடிந்து விழுந்தது. 5 ஆண்டெனா கருவிகளும், ஒரு கண்காணிப்பு கருவியும் வளைந்து சேதம் அடைந்தன. இந்த சம்பவம் சரியாக அதிகாலை 1.19 மணிக்கு நடந்தது. ஆனாலும் விமானம் எந்த வித பிரச்சினையும் இன்றி வானில் பறந்தது.விமானத்தின் சக்கரங்கள் மோதியதில் சுற்றுச்சுவர் உடைந்து விழுந்ததை அருகில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் அவரது உயர் அதிகாரிகளுக்கும், விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் உள்பட அதிகாரிகள் குழுவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்தனர். உடனடியாக கட்டுப்பாட்டு அறை மூலம் அந்த விமானிக்கு விபத்து நடந்திருப்பது பற்றி தகவல் கொடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள் விமானம் திருச்சி வான் எல்லையை தாண்டி சென்று விட்டதால் பெங்களூரு விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மூலம் விமானியை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும் திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் இறங்குதல், மற்றும் ஏறுவதற்கு வழிகாட்டியாக இருக்கும் ஐ.எல்.எஸ். கருவிகள் விமானம் மோதியதில் சேதம் அடைந்து இருப்பது பற்றி விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு வி.ஓ.ஆர். என்ற மாற்று வழி மூலம் விமானங்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இறக்குவதில் எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை.

சுற்றுச்சுவரை இடித்து தள்ளி விட்டு பறந்து சென்ற விமானம் எந்த வித சேதமும் இன்றி துபாய் வரை பறக்க முடியுமா? அதில் உள்ள ஊழியர்கள் உள்பட 136 பயணிகளும் துபாய் வரை பாதுகாப்பாக போய் சேர முடியுமா? என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. விமானம் சுற்றுச்சுவர் மீது மோதிய போது விமானத்தில் இருந்த பயணிகளுக்கு பெரிய அளவில் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் என்ன நடந்தது? எதனால் இந்த சத்தம்? என்று தெரியாமல் பயணிகள் உயிர் பயம் மேலோங்க ஆபத்தான பயணத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையில் பிரச்சினைக்குரிய அந்த விமானம் மஸ்கட் நகர் அருகே சென்று விட்டது. அப்போது விமான நிலைய ஆணையக்குழும அதிகாரிகள் விமானத்தை மும்பை விமான நிலையத்தில் தரை இறக்குமாறு விமானிக்கு கட்டளை பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com