

திருவண்ணாமலை,
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிப்பது குற்றம் என்று மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து கருக் கலைப்பு செய்தால் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உள்ள ஸ்கேன் மையங்களில் இந்த சட்டத்தை மீறி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியப் பட்டு அறிவிப்பதாகவும், கருக்கலைப்பு செய்யப்படுவ தாகவும் வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து, சில ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் திருவண்ணா மலையில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு கணவன், மனைவி உள்பட 3 பேரை கைது செய்தனர். அதன் விவரம் வருமாறு:-
திருவண்ணாமலை நகரையொட்டிய வேங்கிக்கால் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 52). இவர் சென்னை முகப்பேரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (50). இவர்களுக்கு சொந்தமாக அந்த பகுதியில் வீடு உள்ளது. அந்த வீட்டில், ஆனந்தி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று சட்ட விரோதமாக கண்டறிந்து சொல்வதாகவும், பெண் என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை ஊரகம் மற்றும் சுகாதார நலப்பணிகள் இயக்ககத்தை சேர்ந்த பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவிற்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து மாநில கண்காணிப்பு குழுவினர் திருவண்ணாமலைக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட சுகாதார பணிகள் அலுவலர் களிடம் தெரிவிக்காமல் ஆனந்தியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
ஆனந்தி 12-ம் வகுப்பு படித்து விட்டு தொலைதூர கல்வி மூலம் நர்சிங் படித்து உள்ளதும், அவரது வீட்டில் வைத்து கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருக் கலைப்பு செய்வதும் உறுதி செய்யப் பட்டது. அவர் இரவு நேரங்களில் மட்டுமே இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மாநில கண்காணிப்பு குழுவினர் ஆனந்தியை கையும், களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர். இதற்காக கர்ப்பிணி ஒருவரை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவரிடம் ரூ.6 ஆயிரம் கொடுத்து கருக்கலைப்பு செய்ய ஆனந்தி வீட்டிற்கு ரகசியமாக அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த கர்ப்பிணி ஆனந்தி வீட்டிற்கு சென்றார்.
அங்கு கருக்கலைப்பு செய்ய ஆனந்தி நள்ளிரவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மாநில கண்காணிப்பு குழுவின் கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகரன், ரேடியோலாலஜி டாக்டர் நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பாண்டியன் மற்றும் குழுவினர் அங்கு திடீரென புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் உள்ள ரகசிய அறையில் வைத்து அந்த கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற போது ஆனந்தியை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.