இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழகத்தில் 50 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது; சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி பேட்டி

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு சுமார் 50 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது என சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்து உள்ளார்.
இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழகத்தில் 50 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது; சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி பேட்டி
Published on

மணல் லாரிகள் ஓடாது

தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவரும், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவருமான செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி

அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 10 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் நாளை (இன்று) ஒருநாள் மட்டும் தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் மணல் லாரிகளை இயக்காமல், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதேபோல், 9 மாநிலங்களில் காலாண்டு வரி ரத்து செய்யப்பட்டு விட்டது. தமிழக அரசு லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, லாரிகளுக்கான காலாண்டு வரியினை ரத்து செய்ய வேண்டும்.

ரூ.2 ஆயிரம் கோடி ஊழல்

மேலும் குறிப்பிட்ட நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை வாபஸ் பெறக்கோரி வருகிற 27-ந் தேதி முதல் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர். அது தொடர்பாக இதுவரை எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. மணல் லாரி உரிமையாளர்களை அழைத்து பேசி ஆதரவு கோரினால், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது குறித்து செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும்.

குறிப்பிட்ட நிறுவனங்களின் ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் மட்டுமே பொருத்த வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக போக்குவரத்து துறையில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனை மத்திய அரசு புலனாய்வு துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது கூட்டமைப்பின் செயலாளர் பொன்னுசாமி உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com