

புதுச்சேரி,
புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் தினசரி எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 732 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் 1,596 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நிகராக 1,583 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 110 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்ககளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் வீடுகள் தோறும் சென்று தொற்று பாதித்தவர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் நாளை (ஆகஸ்ட் 18) காலை 6 மணி முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த ஊரடங்கின் போது மருந்து கடைகள், பால் நிலையங்களை தவிர பிற கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.