கர்நாடகத்தில் நாளை திட்டமிட்டப்படி முழு அடைப்பு நடைபெறும் வாட்டாள் நாகராஜ் பேட்டி

கர்நாடகத்தில் நாளை (வியாழக்கிழமை) திட்டமிட்டப்படி முழு அடைப்பு நடைபெறும் எனறு வாட்டாள் நாகராஜ் அறிவித்து உள்ளார்.
கர்நாடகத்தில் நாளை திட்டமிட்டப்படி முழு அடைப்பு நடைபெறும் வாட்டாள் நாகராஜ் பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் உருவ பொம்மையை எரித்து பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கன்னட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வட கர்நாடக விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். நீருக்காக நாங்கள் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம். 25-ந் தேதி(நாளை) கர்நாடகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். திட்டமிட்டப்படி முழு அடைப்பு நடைபெறும். அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும்.

பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது. ஆயிரக்கணக்கான கன்னட சங்கங்கள், விவசாய சங்கங்கள் ஆதரவு தருவதாக அறிவித்து இருக்கின்றன. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நமது ஒற்றுமையை, பலத்தை மத்திய அரசுக்கு காட்ட வேண்டும். மகதாயி நதியில் கர்நாடகத்தின் உரிமையை பெற்று தீருவோம்.

முழு அடைப்பு பற்றி வெளிவரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். எங்களை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். குடிநீருக்காக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும். முழு அடைப்பு தினத்தன்று டவுன் ஹாலில் இருந்து மைசூரு வங்கி சர்க்கிள் வரை ஊர்வலம் நடைபெறும். பிரதமர் மோடி இந்த மகதாயி நதிநீர் பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

அதை விடுத்து எங்களை அரசியலுடன் தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல. முழு அடைப்பு அமைதியாக நடத்தப்படும். எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாது. மாநிலத்தின் நலன் கருதி நடத்தப்படும் இந்த முழு அடைப்பை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com