புதுச்சேரி சட்டமன்ற பணிகள் கம்ப்யூட்டர் மயமாகிறது அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுவை சட்டமன்ற பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்குவது தொடர்பாக அலுவலர்களுக்கான 2 நாள் பயிற்சியை சபாநாயகர் சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி சட்டமன்ற பணிகள் கம்ப்யூட்டர் மயமாகிறது அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி
Published on

புதுச்சேரி,

சட்டசபை நடவடிக்கைகளை கணினி மயமாக்குவதின் (கம்ப்யூட்டர் மயம்) ஒரு பகுதியாக புதுவை சட்டமன்ற பணிகளை காகிதமில்லாமல் செயல்படுத்துவது (இ-விதான் திட்டம்) என்று திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சட்டமன்ற பணியாளர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியினை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் அளிக்கிறார்கள். இதன் தொடக்கவிழா சட்டமன்ற செயலக கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

சபாநாயகர் சிவக்கொழுந்து பயிற்சியினை தொடங்கிவைத்தார். அவர் பேசும்போது, புதுவை சட்டமன்ற பணிகள் கணினி மயமாக்கப்படும் என்றும், தினசரி அலுவல் ஆவணங்கள், அனைத்து வகையான கேள்விகள் மற்றும் அறிவிப்புகளை சமர்ப்பித்தல் மற்றும் குழுக்களின் அமைப்பு ஆகியவை கணினி மூலம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

நான் 23 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளேன். நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளை 15 நாட்களுக்கு முன்பே எழுதி தரவேண்டும். அதற்கான பதில்கள் மற்றும் பல்வேறு அறிக்கைகள், மசோதாக்கள், உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல வேண்டியிருக்கும்.

இதற்காக 5 கிலோ எடையுள்ள காகிதங்களை எடுத்து செல்வேன். தற்போது நாடாளுமன்றம் தொடங்கி அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் காகிதமில்லாத நிகழ்வுகளை நடைமுறைப் படுத்த உள்ளனர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் இதர மாநிலங்களைவிட விரைவாக இத்திட்டத்தை செயல்படுத்த முடியும்.

சட்டசபை நடவடிக்கை மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் காகிதமில்லா நடைமுறை அமலாகி வருகிறது. கோப்புகளை காகிதம் மூலம் அல்லாமல் ஒவ்வொரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கும், ஒரு அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அமைச்சரின் அலுவலகத்துக்கும் ஆன்லைன் மூலமே அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு கோப்புகள் அனுப்பும்போது அதில் காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

அலுவலக பணியாளர்கள் தேனீர் இடைவேளை என்று சிறிது நேரம் வெளியே சென்றாலும் இதன்மூலம் கண்டுபிடிக்க முடியும். காகிதமில்லா நடைமுறை இமாச்சல பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் விஜயவேணி, வெங்கடேசன், சங்கர், சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்த வசதியாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகளுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com