மனைவியை அழைத்து சென்று விடுவதாக கூறியதால் ஆத்திரம்: வாலிபருக்கு கத்திக்குத்து, பனியன் நிறுவன தொழிலாளி கைது

மனைவியை அழைத்து சென்று விடுவதாக கூறியதால் ஆத்திரம் அடைந்த பனியன் நிறுவன தொழிலாளி வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.
மனைவியை அழைத்து சென்று விடுவதாக கூறியதால் ஆத்திரம்: வாலிபருக்கு கத்திக்குத்து, பனியன் நிறுவன தொழிலாளி கைது
Published on

அனுப்பர்பாளையம்,

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த திருச்சுளை பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர். இந்த விவகாரம் தெரிய வந்ததும் அந்த பெண்ணின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் தனது மகளை திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு பிரகாஷ் தனது மனைவியுடன் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற கேசவமூர்த்தி விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தனது முன்னாள் காதலியை சந்தித்து பேசி வந்தார். இதையடுத்து கடந்த 3 மாத விடுமுறையில் ஊருக்கு வந்த கேசவமூர்த்தி திருப்பூருக்கு வந்து முன்னாள் காதலியின் கணவர் பிரகாஷ் வேலை செய்த பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் பிரகாஷூம், கேசவமூர்த்தியும் சேர்ந்தே மது குடிக்கும் அளவில் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கேசவமூர்த்தியும், பிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர் மணீஸ்குமார் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று மது குடித்தனர். அப்போது கேசவமூர்த்திக்கும் பிரகாஷ் மனைவிக்கும் இடையேயான பழக்கத்தை மணீஸ்குமார் பிரகாஷிடம் கூறி உள்ளார். இதுகுறித்து பிரகாஷ், கேசவமூர்த்தியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கேசவமூர்த்தி, பிரகாஷிடம் தகராறு செய்தால் உன் மனைவியை நான் அழைத்து சென்று விடுவேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தான் வைத்திருந்த கத்தியால் கேசவமூர்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த கேசவமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கேசவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com