ஊரடங்கில் இன்று முதல் மேலும் தளர்வுகள்: புதுவையில் பஸ்களை இயக்கவும், வழிபாட்டுதலங்களுக்கும் அனுமதி; மளிகை, மதுக்கடைகள் மாலை 5 மணி வரை திறக்கலாம்

ஊரடங்கில் மேலும் தளர்வுகள்அளிக்கப்பட்டுள்ள நிலையில் மளிகை, மதுக்கடைகள் மாலை 5 மணி வரை செயல்படலாம். பஸ்களை இயக்கவும், வழிபாட்டுதலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் இன்று முதல் மேலும் தளர்வுகள்: புதுவையில் பஸ்களை இயக்கவும், வழிபாட்டுதலங்களுக்கும் அனுமதி; மளிகை, மதுக்கடைகள் மாலை 5 மணி வரை திறக்கலாம்
Published on

தொற்று பரவல்

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கம் கோரத் தாண்டவமாடிய நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த (மே) மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால் ஜூன் 1-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.இந்தநிலையில் புதுவையில் தினசரி பாதிப்பு 2 ஆயிரமாக இருந்த தொற்று பாதிப்பு 500க்கு கீழ் சரிந்தது. உயிரிழப்பும் குறைந்தது. ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது.

மளிகைக் கடைகளுக்கு அனுமதி

இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீடிப்பதுடன் சில தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் பழக் கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். ஓட்டல்களில் மாலை 5 மணி வரை பார்சல் வினியோகம் செய்யலாம். அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.பெரிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

பஸ்கள் இயங்கும்

சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதுடன் பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாலை 5 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆட்டோ, கார்களும் இயங்கலாம். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படலாம்.கடற்கரை சாலையில், காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செல்ல அனுமதிக்கப்படும். அங்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.

அனைத்து வழிபாட்டு தலங்களும் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் செயல்பட பல்வேறு வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 14-ந்தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

மதுக்கடைகள் திறப்பு

ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சாராயம், கள், மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாராயம், கள், மதுக்கடைகள் செயல்படலாம். அதே நேரத்தில் மது பார்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.இதற்கான உத்தரவை அரசு செயலாளர் அசோக்குமார் பிறப்பித்துள்ளார்.

இந்தநிலையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் 38 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்பட இருப்பதால், மது பிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com