சென்னையில், 5-ந் தேதி தென்மண்டல அளவிலான இந்தி எதிர்ப்பு மாநாடு ஜி.ராமகிருஷ்ணன் தகவல்

தென்மண்டல அளவிலான இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் வருகிற 5-ந் தேதி நடக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், 5-ந் தேதி தென்மண்டல அளவிலான இந்தி எதிர்ப்பு மாநாடு ஜி.ராமகிருஷ்ணன் தகவல்
Published on

நாகர்கோவில்,

ஐரோப்பிய நாடுகளில் இருந்து 27 எம்.பி.க்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு சென்று பார்வையிட மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. 370 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய தலைவர்கள் கூட காஷ்மீர் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்படி இருக்க ஐரோப்பிய எம்.பி.க்கள் காஷ்மீர் செல்ல அனுமதித்து இருப்பது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். காஷ்மீரில் 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.

மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட தினம் கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (அதாவது இன்று) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் நடக்கிறது. இதையடுத்து வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தென்மண்டல அளவிலான இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சென்னையில் நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தல்

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் மரணம் அடைந்தது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு உள்ளன. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க ஆழ்துளை கிணறுகளை உடனே மூட வேண்டும். மேலும் நவீன தொழில்நுட்பங்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

டாக்டர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் போராட்டம் நடத்தாத சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதோடு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் அறிவிக்க வைத்துள்ளது. எனவே போராட்டம் நடத்தும் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்துவது அவசியம்.

நிவாரணம்

குமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்துகேட்க வேண்டும். கோதையாறு பகுதியில் மின்சாரம் தாக்கி பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு கரை திரும்பாத மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com