கெயில் நிறுவன பணிகளை தடுக்க முயன்ற 8 பேர் கைது

திருமக்கோட்டை அருகே கெயில் நிறுவன பணிகளை தடுக்க முயன்ற கோவிந்தநத்தம் கிராம மக்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கெயில் நிறுவன பணிகளை தடுக்க முயன்ற 8 பேர் கைது
Published on

திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் கோவில்களப்பாலில் இருந்து திருமக்கோட்டை சுழல் மின் உற்பத்தி நிலையத்துக்கு பூமிக்கு அடியில் எரிவாயு கொண்டு செல்லும் வகையில் கோவிந்தநத்தம் கிராமம் வழியாக கெயில் நிறுவனம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிராம மக்கள், விளை நிலங்களில் குழாய் பதித்தால் நிலம் பாதிக்கப்படும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு பணிகளை நிறுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று கெயில் நிறுவனம் சார்பில் மீண்டும் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியது. இதை அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று பணிகளை தடுத்து நிறுத்த முயன்றனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கொயில் நிறுவன பணிகளை தடுத்த நிலங்களின் உரிமையாளர்கள் சுப்பிரமணியன், வேதசெல்வம் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

கோவிந்தநத்தம் கிராமத்தில் நடைபெறும் போராட்டம் குறித்து தகவல் அறிந்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., சம்பவ இடத்துக்கு சென்றார். அவர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து கைது செய்யபட்டவர்களை போலீசார் விடுவித்தனர். நிலத்தின் உரிமையாளர்கள் அனுமதியின்றி நடைபெற்ற குழாய் பதிக்கும் பணிகளை டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தினார். மேலும் நிலத்தின் உரிமையாளர்கள் அனுமதித்தால் பணிகளை மேற்கொள்ளுங்கள். அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றால் பணிகளை மேற்கொள்ள கூடாது என கெயில் நிறுவன ஊழியர்களிடம் அவர் கூறினார்.

பின்னர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தின் இயற்கை வளங்களை சுரண்டி லாபம் திரட்டும் மத்திய அரசு, தமிழகத்துக்கு ஆக்கபூர்வமான எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. சி.எஸ்.ஆர். நிதியை(பெரு நிறுவனங்களின் மேம்பாட்டு நிதி) குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு வழங்குகிறார்கள். சி.எஸ்.ஆர். நிதியை இப்பகுதி மக்களுக்கு வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com