திருவாரூர் மாவட்டத்தை சுழன்றடித்த கஜா புயல்: பெண் உள்பட 2 பேர் பலி

திருவாரூர் மாவட்டத்தை சுழன்றடித்த கஜா புயலில் சிக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திருவாரூர் மாவட்டத்தை சுழன்றடித்த கஜா புயல்: பெண் உள்பட 2 பேர் பலி
Published on

நீடாமங்கலம்,

கஜா புயல் நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்குவதற்கு முன்பாகவே திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கி விட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை, நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நள்ளிரவில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புயல் கரையை கடக்க தொடங்கியபோது அதன் தாக்கம் திருவாரூரில் கடுமையாக எதிரொலித்தது. திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் புயல் காற்று சுழன்றடித்தது. தஞ்சை-திருவாரூர்-நாகை நெடுஞ்சாலையில் மரங்கள் அடுக்கடுக்காக முறிந்து விழ தொடங்கின.

நீடாமங்கலம் பகுதியில் புயல் காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல வீடுகளின் கூரைகள் பறந்தன.

பல பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின் கம்பங்களும் சாய்ந்தன. நேற்று அதிகாலையிலும் புயலின் தாக்கம் இருந்தது. அதிகாலையில் நீடாமங்கலம் பகுதியில் பலத்த மழை கொட்டியது.

அப்போது நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் தெற்கு அம்பலக்கார தெருவை சேர்ந்த வீராச்சாமி மனைவி கனகவள்ளி (வயது 42) என்பவருடைய கூரை வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி கனகவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் குடவாசல் அருகே மூலங்குடி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்(72) என்பவருடைய வீடு அருகே மரம் சாய்ந்து விழுந்தது. இதன் காரணமாக பலத்த சத்தம் கேட்டது. புயல் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளால் ஏற்கனவே பீதியில் இருந்த ராமகிருஷ்ணன், மரம் விழுந்த சப்தத்தில் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

கனகவள்ளி, ராமகிருஷ்ணன் ஆகியோர் புயலின் தாக்கம் காரணமாக உயிரிழந்த தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com