கஜா புயல் சீற்றம்: தஞ்சை மாவட்டத்தில் பேரிழப்பை சந்தித்த தென்னை விவசாயிகள்

தஞ்சை மாவட்டத்தில் பேரிழப்பை சந்தித்த தென்னை விவசாயிகள், ஒரு மரத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஜா புயல் சீற்றம்: தஞ்சை மாவட்டத்தில் பேரிழப்பை சந்தித்த தென்னை விவசாயிகள்
Published on

பட்டுக்கோட்டை,

கஜா புயல் சீற்றத்தால் தஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் பேரிழப்பை சந்தித்து உள்ளனர். இதனால் தென்னையை இழந்த விவசாயிகளுக்கு ஒரு மரத்துக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை சாகுபடி அதிகமாக நடைபெற்று வந்ததால் இந்தியாவில் அதிக அளவில் தென்னை சாகுபடியாகும் கேரளாவை போல பட்டுக்கோட்டை பகுதி தேங்காய் உற்பத்தியில் சின்ன கேரளா என்று அழைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி தண்ணீர் வராததால் இனி நெல் பயிர் செய்தால் எந்தவித பலனும் இல்லை என்று நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு சாதாரண விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைத்து வந்தது. கடந்த 15-ந் தேதி இரவு ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும் பாதியில் முறிந்தும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி பல கோடி ரூபாய் நஷ்டத்தை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி விட்டது.

தஞ்சை மாவட்ட தேங்காய்களுக்கு வடமாநிலங்களில் அதிக கிராக்கி இருந்து வந்தது. வியாபாரிகள் ஆவலுடன் கொள்முதல் செய்து லாரிகளிலும், ரெயில்கள் மூலமும் கொண்டு செல்வார்கள். கஜா புயலின் கோர தாண்டவத்தால் சாய்ந்த தென்னை மரங்களை தோப்பை விட்டு அகற்றுவதற்கே அதிக செலவாகும். புதிதாக தென்னங்கன்று நட்டு அது பலன் கொடுப்பதற்கு 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு மேலாகும். எனவே தென்னையை இழந்த விவசாயிகளுக்கு ஒரு மரத்துக்கு ரூ.20 ஆயிரம் வீதம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் அதிக பரப்பளவில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு தாலுகாக்களில் தென்னை உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டுக்கோட்டை தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் அனைத்து விவசாயிகளும் நெல் சாகுபடியுடன் தென்னையும் வளர்த்து வந்தார்கள். ஆனால் கஜா புயலால் அனைத்து கிராமங்களிலும் தென்னை விவசாயிகள் முழு அளவு தென்னை மரங்களை இழந்து விட்டனர். எனவே தென்னை சாகுபடியாளர்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவர்களுக்கு அரசு சேத விவரங்களை கணக்கிட்டு இழந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடும், விழுந்துள்ள மரங்களை அகற்றி தோப்புகளை சீரமைக்க நிவாரணத்தொகையும் மீண்டும் தென்னை பயிரிட வட்டியில்லா கடன் வசதியும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com