கஜா புயல் தாக்கி 6 நாட்கள் ஆகியும் உணவு, குடிநீர் கிடைக்காமல் சாலையோரம் காத்துக்கிடக்கும் மக்கள்

கஜா புயல் தாக்கி 6 நாட்கள் கடந்த பிறகும் நாகை மாவட்டத்தில் உணவு, குடிநீர் சரிவர கிடைக்காததால் மக்கள் சாலையோரம் காத்துக் கிடக்கிறார்கள். இதனால் மக்கள் அந்த வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை மறித்து உதவி கேட்கும் அவலம் நீடிக்கிறது.
கஜா புயல் தாக்கி 6 நாட்கள் ஆகியும் உணவு, குடிநீர் கிடைக்காமல் சாலையோரம் காத்துக்கிடக்கும் மக்கள்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை, திருவாரூர், நாகை, மாவட்டங்களில் கஜா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த மூன்று மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்கியுள்ளனர். நாகை மாவட்டத்தில் நாகை தொடங்கி வேதாரண்யம் வரை அனைத்து கிராமங்களும் புயலுக்கு கடுமையாக இரையாகி உள்ளன.

இந்த பகுதியில் உள்ள பூவைத்தேடி, ராமேஸ்வரம், விழுந்தமாவடி, வானவன் மகாதேவி, கோவில்பத்து, வேட்டைக்காரனிருப்பு, கன்னிதோப்பு, ஆறுகாட்டுத்துறை, தோப்புத்துறை, செம்போடை வடக்கு, வடக்குபொய்கை நல்லூர், தெற்கு பொய்கைநல்லூர், பரவை, தாளன்திருவாசல், கள்ளிமேடு, புஷ்பவனம், புதுக்குப்பம், கரியாப்பட்டினம், குரவப்புலம், அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கோடியக்கரை, தகட்டூர், வாய்மேடு, ஆயக்காரன்புலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

புயலுக்கு வீடுகளை இழந்த மக்கள் பள்ளிகள், திருமண மண்டபங்கள், கோவில்கள் மற்றும் புயல் நிவாரண பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நாகை-வேதாரண்யம் இடையே ஆங்காங்கே சாலை ஓரங்களிலும் பொதுமக்கள், புயல் நிவாரண மையங்கள் அமைத்து கடந்த 6 நாட்களாக தங்கியுள்ளனர்.

அங்குள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. இதனால் முகாம்களில் உள்ள மக்கள் 50 பேர், 25 பேர் என திரண்டு சாலை ஓரங்களில் நின்று அந்த வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை வழி மறித்து உதவி கேட்கும் நிலை உருவாகி உள்ளது.

இவ்வாறு வாகனங்களை பொதுமக்கள் மறிக்கும்போது ஒரு சில வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்பவர்கள் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். சிலர் வேறு பகுதிக்கு எடுத்து செல்வதாக கூறிவிட்டு செல்கிறார்கள். இதனால் நாகை-வேதாரண்யம் சாலையில் மக்கள் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் அவலம் தொடர்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com