கேரளாவில் உள்ள குப்பைகளை தமிழக பகுதியில் கொட்டுவதா? நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கேரளாவில் உள்ள குப்பைகளை தமிழக பகுதியில் கொட்டுவதா? என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கேரளாவில் உள்ள குப்பைகளை தமிழக பகுதியில் கொட்டுவதா? நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
Published on

கம்பம்,

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்வதற்கு போடிமெட்டு சாலை, கம்பம்மெட்டு சாலை, குமுளி சாலை ஆகிய 3 மலைப்பாதைகள் அமைந்துள்ளன. இதில் கம்பத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் கேரளாவை சென்றடையும் கம்பம்மெட்டு மலைப்பாதை கம்பம் மேற்கு வனச்சரகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியே செல்கிறது.

இந்த மலைப்பாதை வழியாக தமிழகப்பகுதியில் கேரள மாநில கழிவுகள் கொட்டப்படுகிறது. அதாவது காலாவதியான ரசாயன கழிவுகள், உணவு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவகழிவுகள், இறைச்சி கழிவுகளை கேரளாவில் பொது இடங்களில் கொட்டுவதற்கு அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அந்த கழிவுகளை கேரளாவில் கொட்ட முடியாமல் லாரிகள் மற்றும் ஜீப்புகளில் ஏற்றிக்கொண்டு வந்து தமிழகத்தில் கம்பம்மெட்டு மலைப்பாதையில் உள்ள வனப்பகுதி மற்றும் அடிவாரப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர்.

குறிப்பாக கம்பம் மெட்டு மலைப்பாதையில் 18-ம் கால்வாய் அருகே தரிசு நிலங்களில், காலாவதியான ரசாயனபவுடர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், காலாவதியான ஊறுகாய்கள், காய்கறி கழிவுகள், ஒர்க்ஷாப் கழிவுகள் ஆகியவைகளை நள்ளிரவு நேரங்களில் சரக்கு லாரிகள் மூலம் ஏற்றி வந்து கொட்டி தீவைத்து எரித்துவிடுகின்றனர். இந்த புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. மேலும் காலாவதியான பொருட்களை உட்கொள்ளும் வன விலங்குகள் மற்றும் பறவைகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் கேரளாவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் சேகரமாகும் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை கேரளாவில் கொட்டுவதற்கு அங்குள்ள அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் அங்குள்ள குப்பைகளை இரவு நேரங்களில் குமுளி மற்றும் கம்பம்மெட்டு வழியாக தமிழகப்பகுதியில் சாலையோரங்களில் கொட்டிச்செல்கின்றனர். எனவே சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. கம்பம்மெட்டு எல்லையில் தமிழக போலீஸ் சோதனைசாவடி மற்றும் வனத்துறை சோதனைசாவடி இருந்தும் அங்கு முறையான வாகன சோதனைகள் இல்லாததாலேயே குப்பைக்கழிவுகளை தமிழக பகுதிக்குள் வந்து கொட்டி செல்கின்றனர். எனவே இரவு நேரங்களில் கம்பம்மெட்டில் உள்ள தமிழக போலீஸ் சோதனை சாவடி மற்றும் வனத்துறை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com