பண்ட்வால் அருகே கியாஸ் டேங்கர் லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 5 பேர் உடல் நசுங்கி பலி

பண்ட்வால் அருகே கியாஸ் டேங்கர் லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
பண்ட்வால் அருகே கியாஸ் டேங்கர் லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 5 பேர் உடல் நசுங்கி பலி
Published on

மங்களூரு,

தட்சிணகன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று காலை ஒரு கியாஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அதுபோல் பெல்தங்கடியில் இருந்து உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் நோக்கி ஒரு காரும் சென்று கொண்டிருந்தது. அப்போது பண்ட்வால் அருகே பிரம்மரகூடுலு சுங்கச்சாவடி அருகே எதிர்பாராதவிதமாக அந்த கியாஸ் டேங்கர் லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சிலர் காரின் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இந்த கோர விபத்தை நேரில் பார்த்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து, காரில் சிக்கியிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர்.

இதனால் அவர்கள் 11 பேரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மற்ற 10 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ட்வால் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியான 5 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். முதலில் பலியானவர்கள் யார், அவர்களது பெயர், முகவரி தெரியவில்லை.

போலீஸ் விசாரணையில், பலியானவர்களில் 4 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளது. ஒருவரின் பெயர் தெரியவில்லை. அதாவது பட்கல் பகுதியை சேர்ந்த கோவிந்தா, பத்மாவதி, நாகராஜ், கணேஷ் ஆகியோர் பலியானதும், பலியான 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. விபத்தில் பலியானவர்களும், காயமடைந்தவர்களும் தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் விபத்தில் சிக்கிய காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதைதொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதுபற்றி பண்ட்வால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com