வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி சுருட்டல், மோசடி ஆசாமிகள் மீது மேலும் பலர் புகார்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து கைதான 3 பேர் மீது மேலும் பலர் நேற்று புகார் செய்தனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி சுருட்டல், மோசடி ஆசாமிகள் மீது மேலும் பலர் புகார்
Published on

கோவை,

கோவை கணபதியை சேர்ந்த பிரின்ஸ் டேனியல்(வயது34), பொள்ளாச்சியை சேர்ந்த விக்னேஷ் பாரதி(29), அன்னூரை சேர்ந்த அருண் ஆகியோர் கோவையில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள் 3 பேரும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் என்ஜினீயர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான வேலை காலியாக இருப்பதாகவும், மாதம் ரூ.4 லட்சம்வரை சம்பளம் கிடைக்கும் என்றும் அறிவித்தனர்.

அதை நம்பி என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரிகள் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை கொடுத்தனர். மேலும் வேலை கேட்ட ஒவ்வொருவரிடமும் தலா ரூ.2 லட்சம் வரை மொத்தம் ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்து விட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகினர். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்க வில்லை. இதையடுத்து அவர்கள் வேலை வாய்ப்பு, அலுவலகத்தை பூட்டிவிட்டு 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரின்ஸ்டேனியல், விக்னேஷ்பாரதி, அருண் ஆகிய பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 பேரின் பாஸ்போர்ட்டுகள் மீட்கப்பட்டன.

கைதான 3 பேரும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஏராளமானவர்களிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத் துக்கு 50-க்கும் மேலான பட்டதாரிகள் வந்து மோசடி ஆசாமிகள் 3 பேர் மீது புகார் மனு அளித்தனர்.

இது குறித்து நகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கூறியதாவது:-

இதுவரை பாதிக்கப்பட்ட 130 பேர் புகார் செய்துள்ளனர். மேலும் பலர் புகார் செய்வார்கள் என்று தெரிகிறது. வசூலித்த பணத்தை எதில் முதலீடு செய்துள்ளனர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வடவள்ளி ஐ.ஓ.பி. காலனி பகுதியில் கைதான டேனியல் ஒரு வீட்டை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சொத்தை கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.80 லட்சத்தை சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடி தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com