பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வகுப்பு ஆசிரியைக்கு ஆதரவாக போராட்டத்திற்கு முயன்ற மாணவிகள்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வகுப்பாசிரியையின் பணியிடை நீக்கத்தை ரத்துசெய்து மீண்டும் பணிக்குவர அனுமதிக்கக்கோரி நேற்று மாணவிகள் போராட்டம் நடத்த முயன்றதால் பனப்பாக்கம் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வகுப்பு ஆசிரியைக்கு ஆதரவாக போராட்டத்திற்கு முயன்ற மாணவிகள்
Published on

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மனிஷா, தீபா, சங்கரி, ரேவதி ஆகிய 4 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக வகுப்பாசிரியை மீனாட்சிசுந்தரேஸ்வரி, தலைமை ஆசிரியை ரமாமணி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்டு தற்காலிகமாக பணிபுரிந்த 2 ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல பள்ளி திறக்கப்பட்டது. 9.30 மணிக்கு இறை வணக்கம் நடைபெற்றது. இறை வணக்கம் முடிந்ததும் அனைத்து மாணவிகளும் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர். ஆனால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் படித்த பிளஸ்-1 நர்சிங் பிரிவை சேர்ந்த மாணவிகள் வகுப்புக்கு செல்லவில்லை.

அவர்கள் இறைவணக்கம் முடிந்ததும் போராட்டம் நடத்துவதற்காக பள்ளியின் நுழைவு வாயிலை நோக்கி சென்றனர். இதைப்பார்த்த ஆசிரியைகள் ஓடிச்சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், சக்திலிங்கம் ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவிகள் கூறுகையில் வகுப்பாசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்துசெய்து அவர் மீண்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு முதன்மை கல்வி அலுவலர் வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்ததும் இதுபற்றி பேசலாம் அதுவரை வகுப்புக்கு செல்லுங்கள் என்றனர். அதை ஏற்று மாணவிகள் வகுப்புக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனோதத்துவ நிபுணர் செந்தில்குமார் ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். நர்சிங் பிரிவில் 85 மாணவிகள் படித்துவந்தனர். 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதால் 81 பேர் படிக்கிறார்கள். அவர்களில் நேற்று 71 மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.

அவர்களுக்கு தனி அறையில் வைத்து உளவியல் பயிற்சியளிக்கப்பட்டது. தலா 6 மாணவிகள் வீதம் அழைத்து அவர்களுக்கு மனோதத்துவ நிபுணர் செந்தில்குமார் மனோதத்துவம் குறித்து கவுன்சிலிங் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com