திருமலை, திருப்பதி, திருச்சானூரில் கோகுலாஷ்டமி, கோபூஜை விழா

திருமலை, திருப்பதி, திருச்சானூரில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் மற்றும் கோபூஜை விழா நடந்தது.
திருமலை, திருப்பதி, திருச்சானூரில் கோகுலாஷ்டமி, கோபூஜை விழா
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கோகுலாஷ்டமி விழா ஆஸ்தானம் நடந்தது. அதையொட்டி உற்சவர்களான ஸ்ரீகிருஷ்ணர், மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உக்ரசீனிவாசமூர்த்தியை அலங்கரித்து சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருள செய்து தங்க வாசலில் உள்ள முக மண்டபத்தில் வைக்கப்பட்டது.

மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை கோவிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடந்தது. அப்போது உற்சவர்களுக்கு நெய்வேத்தியம், சிறப்புப்பூஜை நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை உறியடி உற்சவம் நடக்கிறது.

கோபூஜை

திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் நேற்று கோபூஜை நடந்தது. அதையொட்டி அங்குள்ள வேணுகோபாலசாமி கோவிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் ஏகாந்தமாக சிறப்புப்பூஜைகள் நடந்தது. முன்னதாக அனைத்து மாடுகளை குளிப்பாட்டி குங்குமம், சந்தனம் வைத்து, அலங்காரம் செய்யப்பட்டது.

கோபூஜையில் பங்கேற்ற தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலுக்கு அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி கோபூஜை மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர், மாடுகள், குதிரைகளுக்கு கோபூஜை செய்து கற்பூர ஆரத்தி காண்பித்து புல், பச்சரிசி, வெல்லம், பழம் ஆகியவற்றை வழங்கினார்.

ஊஞ்சல் சேவை

திருமலை அருகே கோகர்ப்பம் அணையில் உள்ள காளிங்க நர்த்தன ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதேபோல் திருச்சானூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. மூலவர் ஸ்ரீகிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை ஆகியவை நடந்தது.

பின்னர் ஸ்ரீகிருஷ்ணர், ராதா, ருக்மணி ஆகியோருக்கு ஊஞ்சல் சேவை, கோபூஜை ஆஸ்தானம் நடந்தது. கொரோனா பரவலால் திருச்சானூர் நான்கு மாடவீதிகளில் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலை உறியடி உற்சவம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com