ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு
Published on

ஆவடியை அடுத்த வெள்ளானூர் பாரதி நகரை சேர்ந்தவர் மாலதி (வயது 55). இவரது வீடு வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஓரமாக அமைந்துள்ளது. என்ஜினீயரான இவருடைய மகள் லதா (28), சென்னை தரமணியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 14-ந் தேதி லதாவுக்கு திருமணம் ஆனது. அதன்பிறகு அவர், வேலூரில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த மாலதி, நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு அதே வெள்ளானூர் விஜயலட்சுமி நகரில் வசிக்கும் அவரது தம்பி வீட்டுக்கு சென்றுவிட்டார். மாலையில் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் மரக்கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 32 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com