

சார்ஜா விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர், வெளியில் நடந்து சென்றபோது அவரது நடை சற்று வித்தியாசமாக இருந்தது.
அவர் தான் கால்களில் அணிந்திருந்த செருப்புகளை தரையோடு தரையாக இழுத்தபடி நடந்து சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.
காலுக்கு அடியில் தங்கம்
அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர். அவர் அணிந்து இருந்த செருப்புகளை கழற்றியபோது, அவரது கால் பாதத்தின் அடியில் கருப்பு நிற பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது.
அதை பிரித்து பாத்தபோது தங்க தகடை பாதத்தில் மறைத்து, அதன் மீது பிளாஸ்திரி ஒட்டி நூதன முறையில் கடத்தி வந்தது தெரிந்தது. அவரது இரு கால் பாதங்களின் அடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.