

மதுரை,
மதுரை சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் விழாவில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவையும், கள்ளழகர் கோவிலில் நடைபெறும் விழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தல் போன்றவை சிறப்பு வாய்ந்தவை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.
ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் மட்டும் கோவிலுக்குள் நடந்தது. இதே போல் கள்ளழகர் கோவிலில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தல் மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்று அந்த நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியை இணையதளம் மூலம் பக்தர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விழாவையொட்டி கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை கள்ளழகர் விசுவரூப தரிசனத்தில் காட்சி அளித்தார். பின்னர் கள்ளழகர் அங்கிருந்து கிளம்பி கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் சன்னதி முன்பு எழுந்தருளினார்.
அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு கள்ளழகருக்கு எதிர்சேவை அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வளைதடி, நேரிக்கம்பு உள்ளிட்டவை ஏந்தி தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டு செல்வது போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் 10 மணிக்கு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி எழுந்தருளினார். மேலும் அவர் வைகை ஆற்றில் எழுந்தருள்வது போன்ற அமைப்பு கோவிலின் உள்ளே செய்யப்பட்டிருந்து. பெரிய தொட்டியை ஆறு போல் மாற்றி இருந்தனர். அங்கு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் காட்சி அளித்தார். அப்போது அழகருக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சைத்ய உபசார சேவையும், 1.30 மணிக்கு சேஷ வாகனத்தில் அழகர் எழுந்தருளிய சேவையும் நடந்தது.
பின்னர் 4.30 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர், கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் மோட்ச புராணம் வாசித்தல் நடந்தது. இதற்காக தேனூரில் இருந்து நாரை ஒன்று அழகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் விதமாக அந்த நாரை கோட்டை வாசல் பகுதிக்கு கொண்டு வந்து பறக்க விடப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கு சேவையும், இரவு 8 மணிக்கு பெருமாள் ஆஸ்தானம் செல்லுதல் சேவையும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மட்டும் இணையதளம், யூடியூப் மற்றும் முகநூல் மூலமாக ஒளிபரப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் தங்கள் இல்லத்தில் இருந்தே பார்த்து தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். நேற்று விழா நடந்த போது கோவில் கோட்டை வாசல் முன்பு பக்தர்கள் சூடம் ஏற்றி அழகரை நினைத்து வழிபாடு செய்தனர்.