கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசு முடிவு

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசு முடிவு
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம், கோடியக்கரையில் வங்கக்கடலுக்கு மேற்கிலும், பம்ப்ஹவுசிற்கு கிழக்கிலும், பாக்ஜலசந்தி கடற்கரை பகுதிக்கு வடக்கிலும், ராமர் பாதம் மற்றும் விமானப்படைக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு தெற்கிலும் என 5350 ஏக்கரில் அமைந்துள்ளது.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான புள்ளி மான்கள், வெளிமான்கள், நரி, குதிரை, குரங்கு, முயல், காட்டுப்பன்றி உள்பட பல்வேறு வகையான விலங்குகளும், பறவைகள் சரணாலயத்தில் செங்கால் நாரை, பூநாரை, கூழக்கடா, கடல் காகம், குருவி வகைகள், கரண்டி மூக்கு நாரை, உள்ளான் வகைகள் உள்பட 257 வகையான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகளும் சீசன் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு வந்து தங்கி இந்த சதுப்பு நில பகுதியில் உள்ள மீன், புழு பூச்சிகளை தின்று மீண்டும் தங்கள் தாயகம் திரும்புகின்றன.

இந்த பறவைகளை ஆராய்ச்சி செய்வதற்காக மும்பையை சேர்ந்த ஆராய்ச்சிக்குழுவின் சார்பில் விஞ்ஞானி பாலச்சந்திரன் இங்கு வந்து தங்கி உள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வரும் பறவைகளை அடையாளம் கண்டு கொள்வதற்காக அந்த பறவைகளை பிடித்து அதன் கால்களில் வளையம் மாட்டி விடுகிறார்கள்.

இந்த பறவைகள் பல்வேறு நாடுகளுக்கு செல்லும்போது அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுபோல் அங்கு ஆராய்ச்சி செய்யும்போது இந்த பறவைகள் எந்த நாட்டில் இருந்து வந்துள்ளது என்பதை கண்டறிகிறார்கள்.

தற்போது இந்த பறவைகள் சரணாலயம் கோடியக்கரை பம்ப் ஹவுசில் இருந்து மேற்கே பஞ்சநதிக்குளம் வரை 20 ஆயிரம் ஏக்கர் சதுப்பு நிலப்பகுதி வரை விரிவடைந்துள்ளது. இந்த 20 ஆயிரம் ஏக்கர் நிலமும் தற்போது வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வனத்துறையின் பாதுகாப்பில் உள்ளது.

இந்த நிலையில் இந்த 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்து இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com