அரசு நில முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: எடியூரப்பாவிடம் விசாரிக்க அனுமதி - கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அரசு நில முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்ததுடன், இந்த வழக்கு தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்து வருபவர் எடியூரப்பா.

பா.ஜனதாவை சேர்ந்த இவர், இதற்கு முன்பு முதல்-மந்திரியாக இருந்த போது, பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கங்கேனஹள்ளி, மடதஹள்ளியில் உள்ள 1.11 ஏக்கர் அரசு நிலத்தை விடுவித்து உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, அரசாணயில் இருந்து 1.11 ஏக்கர் அரசு நிலம் விடுவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அரசு நிலத்தை விடுவித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, லோக் ஆயுக்தா போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் ஜெயக்குமார் என்பவர் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்டோர் மீது புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அரசு நிலத்தை விடுவித்திருந்தது தொடர்பான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அரசு நில முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது எடியூரப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அரசு நில முறைகேடு தொடர்பாக தன் மீது லோக் ஆயுக்தா போலீசில் பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு மீது நேற்று நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தீர்ப்பு கூறினார்.

அப்போது ஆர்.டி.நகரில் அரசு நிலத்தை விடுவித்த விவகாரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது சரியானதே. எனவே அந்த வழக்கில் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை. விசாரணையை லோக் ஆயுக்தா போலீசார் தொடரலாம். மனுதாரர் கூறியபடி வழக்கை ரத்து செய்ய இயலாது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அதிரடி தீர்ப்பு கூறியுள்ளார்.

மேலும் எடியூரப்பாவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு நில முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், அவருக்கு மேலும் நெருக்கடி உண்டாகி இருக்கிறது. அவர் விசாரணையை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெங்களூரு பெல்லந்தூரில் அரசு நிலத்தை விடுவித்ததாக லோக் ஆயுக்தா போலீசில் முதல்-மந்திரி எடியூரப்பா மீது மற்றொரு வழக்கு பதிவாகி இருந்தது.

அந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுவும் கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி, இதே நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தார். இதன் மூலம் அரசு நிலத்தை விடுவித்ததாக 2 வழக்குகளை முதல்-மந்திரி எடியூரப்பா எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

இந்த வழக்கில் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா, மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பரபரப்பு தீர்ப்பை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com