நிதி பிரச்சினை இருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது சரியா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

நிதி பிரச்சினை இருக்கும் நிலையில் அரசுக்கு எதிராக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது சரியா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
நிதி பிரச்சினை இருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது சரியா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
Published on

சென்னை,

மொழிப்போர் தியாகிகளை போற்றும் வகையில் அ.தி.மு.க. சார்பில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்சென்னை தெற்கு மாவட்டச்செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

பெரியார், அண்ணா அமைத்து தந்த தன்மான பாதையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழர்களுக்காக பாடுபட்டதை போல தான் இந்த அரசும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தமிழ் மொழியை காப்பதற்காக அ.தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்.

தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை அ.தி.மு.க. அரசு படைத்து இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த ஒரு அமைப்பு சமூக பொருளாதார அடிப்படையில் தமிழ்நாடு ஆளுமையில் 2-வது சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று அறிவித்து இருக்கிறார்கள். அதெல்லாம் இங்கே இருக்கிற எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியவில்லை.

முதல்-அமைச்சர் என்ற நாற்காலி கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், விரக்தியின் விளிம்புக்கே அவர் போய் விட்டார். தினமும் ஏதாவது குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டே இருக்கிறார். பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் இது. பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதலிடம் பெற்று இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் எப்படி மின்வெட்டு இருந்தது என்பது மக்களுக்கு தெரியும். தமிழகத்தை 3 ஆண்டுக்குள் மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் சொன்னார்.

அவர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தடையில்லா மின்சாரம் கிடைத்தது, மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியது. அதற்கு கூட மு.க.ஸ்டாலின் தடை போடுகிறார். உயர் மின் கோபுரம் அமைக்க கூடாது என்று சொல்கிறார். போராட்டத்தை தி.மு.க. தூண்டி விடுகிறது.

போராட்டம் நடப்பது வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறோம். இப்படிபட்ட சூழ்நிலையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம் நடப்பது சரியா? இதை அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

அரசுக்கு நிதி பிரச்சினை இருக்கிறது. யார் முதல்- அமைச்சராக இருந்தாலும் நிலைமை இது தான். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இருக்கிறதை வைத்து தானே ஒதுக்கீடு செய்ய முடியும்.

அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்கிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை சென்று பாருங்கள். அவர்களை நாங்கள் குறை சொல்லவில்லை. இதையெல்லாம் எண்ணி பாருங்கள் என்று தான் சொல்கிறேன். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். அரசு ஒரு சக்கரம் என்றால் அரசு ஊழியர்கள் இன்னொரு சக்கரம். எனவே அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். மக்களுக்காக பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com