சிவகாசியில், அரசு தலைமை மருத்துவமனை - மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்

சிவகாசியில் அரசு தலைமை மருத்துவமனை அமைய வேண்டியது அவசியம் என்றும் அதற்காக குரல் கொடுப்பதாகவும் மாணிக்கம் தாகூர் எம்.பி.கூறினார்.
சிவகாசியில், அரசு தலைமை மருத்துவமனை - மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
Published on

சிவகாசி,

சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் செலவில் சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. முகாமில் 24 டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களை பரிசோதனை செய்து உரிய மருந்து-மாத்திரைகளை வழங்கினர். இதனை மாணிக்கம்தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், கவுன்சிலர்கள் ஜி.பி.முருகன், விஸ்வை கணேசன், மஞ்சுநாத், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் அரசன் அசோகன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாமுவேல் நாடார், சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரி ஜெயச்சந்திரன் செய்திருந்தார்.

பின்னர் நிருபர்களிடம் மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறியதாவது:-

மத்திய அரசு வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோய் இல்லாமல் ஆக்க தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதுபோன்ற முகாம்களில் பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டு நோய் பாதிப்பு இருந்தால் அதற்கான முழு சிகிச்சையையும் இலவசமாக செய்து கொள்ளலாம்.

விருதுநகரில் மருத்துவ கல்லூரி வருவதால் அங்கு தற்போது செயல்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனையை சிவகாசிக்கு கொண்டு வரவேண்டும்.அதற்கு குரல் கொடுப்பேன். பட்டாசு, தீப்பெட்டி, அச்சு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிவகாசியில் அதிகளவில் வசித்து வருவதால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை கொடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அந்த கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை. இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் வராமல் தடுப்பது யார்?

மக்களவையில் ராகுல்காந்தியை பற்றி மந்திரி ஹர்சவர்தன் தவறாக பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் மையப்பகுதிக்கு சென்றோம். அப்போது நான் ஹர்சவர்தனை பார்த்து ராகுல்காந்தியின் கேள்விக்கு பதில் கூறுங்கள் என்று கூறினேன்.அப்போது அங்கிருந்த பா.ஜனதா எம்.பி.க்கள் சிலர் எங்களை தாக்க வந்தனர். அப்போது நாங்கள் எங்களை தற்காத்துக்கொண்டோம். இந்த சம்பவத்தை தொடர்ந்து சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார். பா.ஜனதா உறுப்பினர் கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் குறித்து சபாநாயகரை சந்தித்து புகார் கடிதம் கொடுத்துள்ளோம். நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com