

வேலூர்,
வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கனூரை சேர்ந்த சோட்டா சாயபு (வயது 80) ஒருவர். இவர் கடந்த 1984ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய ஜெயிலில் 1985ம் ஆண்டு அடைக்கப்பட்டார்.
சோட்டா சாயபுக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பரோலில் சென்ற சோட்டா சாயபு தலைமறைவானார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரியில் பதுங்கியிருந்த அவரை சிறை போலீசார் கைது செய்து மீண்டும் வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் சோட்டா சாயபுக்கு கடந்த 13ந் தேதி திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சோட்டா சாயபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சோட்டா சாயபு உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.