அரசு பணம் வீணாவது தடுக்கப்படும்: இந்திரா உணவகத்தை மூட வேண்டும்; மந்திரி சி.டி.ரவி பேட்டி

இந்திரா உணவகத்தை மூட வேண்டும் என்று மந்திரி சி.டி.ரவி கூறினார். சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரசு பணம் வீணாவது தடுக்கப்படும்: இந்திரா உணவகத்தை மூட வேண்டும்; மந்திரி சி.டி.ரவி பேட்டி
Published on

பெங்களூரு,

இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை கர்நாடகத்தில் அமல்படுத்தினால் இங்கு மாநிலம் பற்றி எரியும் என்று முன்னாள் மந்திரி யு.டி.காதர் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறியாக வைத்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பான்மை மக்கள் கிளர்ந்து எழுந்தால் என்னவாகும் என்பது அவருக்கு தெரியுமா?. யு.டி.காதர் போன்ற மனநிலை கொண்டவர்களே கோத்ராவில் தீயிட்டனர். தீவைப்பதில் அவர்கள் நிபுணர்கள்.

தீவைத்தால் அதை அரசு வேடிக்கை பார்க்காது. யு.டி.காதரின் கருத்து அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பெரும்பான்மை மக்கள் அமைதியாக இருப்பதை பலவீனம் என்று கருதக்கூடாது. பாகிஸ்தான் இந்தியாவில் சேர்ந்தால் அந்த நாட்டு மக்களுக்கும் குடியுரிமை வழங்குகிறோம். நாங்கள் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம். பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்துள்ள யு.டி.காதரின் உறவினர்களுக்கு குடியுரிமை வழங்க மாட்டோம்.

இந்திரா உணவகத்தின் பெயரை மாற்றியே தீர வேண்டும். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் நேரில் வலியுறுத்துவேன். அரசின் பணத்தில் இந்த உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென்றால் அன்னபூர்னேஸ்வரி என்று பெயரிட வேண்டும். இந்திரா உணவக திட்டத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே இந்திரா உணவகத்தை மூட வேண்டும். இதன் மூலம் அரசு பணம் வீணாவது தடுக்கப்படும். இந்த திட்டத்தின் டெண்டர் காங்கிரஸ் ஆட்சியில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் அரசு பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.

காங்கிரசார் அடித்த கொள்ளையில் வேண்டுமானால் உணவு வழங்கட்டும். காங்கிரசார் தங்களின் சொந்த பணத்தில் ராஜீவ் உணவகம் அல்லது அசைவ உணவுகளை வழங்கி சோனியா காந்தி உணவகம் என்று பெயரிட்டு கொள்ளட்டும். இதற்கு எங்களது ஆட்சேபனை இல்லை.

அரசு திட்டத்திற்கு அன்னபூர்னேஸ்வரி என்று பெயரிடுவது தான் சரியாக இருக்கும். காங்கிரசின் அரசியல் லாபத்திற்காக இந்திரா உணவகங்களுக்கு தலா ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை செலவு செய்யும்போது, நம்பகத்தன்மை இருக்க வேண்டும்.

ஏழை மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. இதில் பழிவாங்கும் அரசியல் இல்லை. 20 பேருக்கு உணவு வழங்கிவிட்டு 200 பேருக்கு வழங்கியதாக கணக்கு காட்டுகிறார்கள். இது வெட்கக்கேடானது.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com